தென்னையின் மருத்துவம்
*தென்னம்பூ மணப்பாகு*
பூலோகக் கற்பக விருட்சம்’ தென்னை மரத்துக்கு இன்னொரு பெயர்... தென்னை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மகத்துவமானது. தேங்காய் என்றால் சமையலுக்குத் தேங்காய்ப்பூ, தலைக்குத் தேய்க்க, தேங்காய் எண்ணெய் என இரண்டே உபயோகங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், தென்னையின் ஒவ்வொரு பகுதியும் அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் பயன்படக்கூடியது.
தென்னம் பூ (பூம்பாளை)
தென்னை மரத்தின் பூ, சாப்பிடத் துவர்ப்பாக இருக்கும். அதிக ரத்தப்போக்கு இருக்கும் பெண்கள், காலையில் வெறும் வயிற்றில் தென்னம் பூவைச் சாப்பிட்டு, உடனே பால் குடித்துவிட வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து, காலை உணவைச் சாப்பிடலாம். மாதவிலக்கு ஆகும் சமயத்தில், மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால், அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும். மேலும், கர்ப்பப்பை பிரச்னைகளைச் சரிப்படுத்தும்.
வெயில் காலத்தில் ஏற்படும் கடுப்புக் கழிச்சல் எனப்படும் வயிற்று வலி. இதனால், சிலருக்கு மலம் கழிக்கும்போது, ரத்தம்கூட வரலாம். இதற்குத் தீர்வாக, தென்னம் பூச்சாறு, தயிர் - தலா 100 மி.லி, அரை எலுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றைக் கலந்து குடித்தால், வயிற்று வலி குறைந்து, மலம் கழிப்பது சுலபமாகும். ரத்தம் வெளியேறுவதும் நிற்கும்.
தென்னம் பூ, கழற்ச்சிக்காய், நெருஞ்சி முள் ஆகியவற்றை 20 கிராம் அளவுக்குச் சம அளவில் எடுத்து, 100 மி.லி ஆட்டுப் பாலில் வேகவைத்து, உலர்த்திப் பொடியாக்கி, 48 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டுவர, விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
குறும்பை
முதிராமல் உதிரும் தேங்காய்க்குக் குறும்பை என்று பெயர். வயிற்றுப் புண், வயிற்று எரிச்சல், நெஞ்சு எரிச்சல், தீப்புண்ணுக்கு, குறும்பை நல்ல மருந்து. விஷம் குடித்ததால் குடல் மற்றும் வயிற்றுப் பகுதியில் ரணமாகியிருப்பவர்கள், அதிக மருந்து உட்கொண்டு வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள், அதிக மது குடித்து குடல் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது குறும்பையைத்தான்.
குறும்பையைச் சின்ன சின்னதாக நறுக்கி, ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்து, அது கால் லிட்டர் தண்ணீராகச் சுண்டிய பின், வெறும் வயிற்றில் ஐந்து நாட்கள் வரை குடிக்க வேண்டும். தென்னங்கருப்பட்டி மருந்துகளிலும் இனிப்புக்கான உணவாகவும் பயன்படுகின்றது தென்னங்கள் உடலினை உறுதிப்படுத்தும் போதைதரும் கால்சியம் மிகுந்தது. தென்னையில் இருந்து வரும் அனைத்து பாகங்களிலும் மனித வாழ்விற்குத் தேவையான பயன்பாடுகள் நிறைந்துள்ளன.
Comments
Post a Comment